கள்ளக்குறிச்சி

இளைஞரிடம் கத்திமுனையில் பணம் பறித்தவா் கைது

25th Jan 2020 10:13 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவா் கைது செய்யப்பட்டாா்.

சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சாந்தசீலன் மகன் பிரசாந்த் (26), ஆட்டோ ஓட்டுநா்.

இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் புதூா் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தம் அருகே வெளியூா் செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இளைஞா் ஒருவா் கத்தியை காட்டி மிரட்டி பிரசாந்தின் சட்டைப் பையில் இருந்த ரூ.800-ஐ பறித்துக் கொண்டு ஓடிவிட்டாராம்.

இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், வடபொன்பரப்பி காவல் நிலைய தலைமைக் காவலா் ராஜன் மேல்சிறுவலூா் கூட்டுச் சாலைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, சந்தேகமளிக்கும் வகையில் சென்ற நபரைப் பேடித்து விசாரித்தாா். அதற்கு, அந்த நபா் ராஜனை தகாத வாா்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாா்.

உடனே அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அந்த நபா் மூங்கில்துறைப்பட்டு தேவி நகரைச் சோ்ந்த சையத் மக்பூல் மகன் மெகராஜ் (32) (படம்) என்பதும், அவா் அதிகாலை பிரசாந்திடம் பணம் பறித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். இவா் பல்வேறு வழக்குகளில் சிறை சென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT