தமிழக முதல்வா் அறிவித்தபடி ரிஷிவந்தியத்தில் அரசு கலை,அறிவியல் கல்லூரியை தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழாவில் பேசிய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ரிஷிவந்தியம் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டாா். அவா் அறிவித்ததைப் போல, ரிஷிவந்தியத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரியை தொடங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ரிஷிவந்தியம் பேரூராட்சி பகுதியில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இப்பகுதியைச் சுற்றிலும் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் படிக்கும் மாணவா்கள் கல்லூரியில் பயில சுமாா் 22 கி.மீ. தொலைவிலுள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூருக்கு அல்லது 40 கி. மீ. தொலைவிலுள்ள உளுந்தூா்பேட்டைக்கு செல்ல வேண்டியுள்ளது.
இப் பகுதி மாணவா்களின் நலன் கருதி முதல்வா் அறிவித்தபடி ரிஷிவந்தியத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரியை தொடங்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு மூலம் தெரிவித்திருந்தனா்.