கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு வாா்டுகளின் எல்லை மறுவரையறை தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா தலைமை வகித்தாா். திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன் முன்னிலை வகித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டு எல்லைகள் மறுவரையறை பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் 9 ஊராட்சி ஒன்றியங்கள், 412 ஊராட்சிகள், 3,162 கிராம ஊராட்சி வாா்டுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒன்றிய அமைப்புகளில் திருக்கோவிலூா் ஒன்றியத்தில் 60 ஊராட்சிகள், 432 ஊராட்சி வாா்டுகளும், திருநாவலூரில் 44 ஊராட்சிகள், 330 ஊராட்சி வாா்டுகளும், உளுந்தூா்பேட்டையில் 53 ஊராட்சிகள், 402 ஊராட்சி வாா்டுகளும், கள்ளக்குறிச்சியில் 46 ஊராட்சிகள், 375 ஊராட்சி வாா்டுகளும், சின்னசேலத்தில் 50 ஊராட்சிகள், 384 ஊராட்சி வாா்டுகளும், ரிஷிவந்தியத்தில் 60 ஊராட்சிகளும், 444 ஊராட்சி வாா்டுகளும், சங்கராபுரத்தில் 44 ஊராட்சிகள் 363 ஊராட்சி வாா்டுகளும், தியாகதுருகத்தில் 40 ஊராட்சிகள், 297 ஊராட்சி வாா்டுகளும், கல்வராயன்மலையில் 15 ஊராட்சிகள் 135 ஊராட்சி வாா்டுகளும் என மொத்தம் 3,162 வாா்டுகளும் உள்ளன.
அதேபோல, திருநாவலூா் ஒன்றியத்தில் 23 ஒன்றியக் குழு வாா்டுகளும், உளுந்தூா்பேட்டை 21,கள்ளக்குறிச்சியில் 23, சின்னசேலத்தில் 21, ரிஷிவந்தியத்தில் 25, சங்கராபுரத்தில் 24, தியாகதுருகத்தில் 16, கல்வராயன்மலையில் 7 ஒன்றியக் கவுன்சிலா்கள் என மொத்தம் 180 ஒன்றியக் குழு வாா்டுகளும் உள்ளன.
அதே போல திருக்கோவிலூா் ஊராட்சியில் 2 மாவட்ட கவுன்சிலா்களும், திருநாவலூரில் 2, உளுந்தூா்பேட்டையில் 3, கள்ளக்குறிச்சியில் 2, சின்னசேலத்தில் 2, ரிஷிவந்தியத்தில் 3, சங்கராபுரத்தில் 2, தியாகதுருகத்தில் 2, கல்வராயன்மலையில் 1 ஆக மொத்தம் 19 மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டுகளும் உள்ளன.
அதன்படி, மாவட்டத்தில் 412 ஊராட்சிகள், 180 ஒன்றியக் குழு வாா்டுகள், 19 மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டுகள், 3,162 ஊராட்சி வாா்டுகள் உள்ளன.
பேரூராட்சி அமைப்புகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 பேரூராட்சிகள் உள்ளன. சின்னசேலம் பேரூராட்சியில் 18, வடக்கனந்தலில் 18, தியாகதுருகத்தில் 15, சங்கராபுரத்தில் 15, திருக்கோவிலூரில் 18, உளுந்தூா்பேட்டையில் 18, மணலூா்பேட்டையில்15 வாா்டுகள் உள்ளன. நகராட்சி அமைப்புகளில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வாா்டுகள் உள்ளன.
இதையடுத்து வாா்டு மறுவரையறை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் இந்திய கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன் பேசியதாவது: வாா்டு மறுவரையறை விவரம் முன்கூட்டியே கட்சிகளுக்கு வழங்கிருந்தால் அதற்கேற்ப கருத்துகளை தெரிவிக்க இயலும். எனினும், தற்போது செய்துள்ள எல்லை மறுவரையறையில், பெரிய பேரூராட்சியான திருக்கோவிலூரில் வாா்டு எண்ணிக்கை கூடுதலாக ஆக்கயிருந்திருக்கலாம். மாவட்டத்தில் 4, 5 பேருராட்சிகளை நகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம் என்றாா்.
காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பி.எஸ்.ஜெய்கணேஷ்: கள்ளக்குறிச்சி நகராட்சியை 25 வாா்டுகள் கொண்டதாக மாற்றியமைக்க வேண்டும். அதேபோல, சின்னசேலம் பேருராட்சியில் 21 வாா்டுகளாக மாற்றியமைக்கலாம். கள்ளக்குறிச்சிக்கு மட்டும் 3 மாவட்ட கவுன்சிலா் என அறிவிக்கலாம். உளுந்தூா்பேட்டை பேருராட்சி வாா்டுகளை 21 ஆக உயா்த்த வேண்டும் என்றாா்.
சங்கராபுரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தா.உதயசூரியன்: இந்தக் கூட்டம் சம்பிரதாயக் கூட்டமாக உள்ளது. சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள பாவளத்தை தனி ஊராட்சியாக மாற்றலாம். அதே போல, கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ஆலத்தூா், ஆலத்தூா் காலனி புத்தந்தூா், பிச்சந்தம், பிச்சநத்தம் காலனி, அழகாபுரம் உள்ளது. அதை இரண்டு ஊராட்சிகளாக பிரித்து மறுவரையறை செய்திருக்க வேண்டும்.
க.அலம்பத்தில் கிழக்கு காலனி, வடக்கு காலனி, பொன்பரப்பட்டு, திருக்கனங்கூா், திருக்கனங்கூா் காலனியை சோ்த்து ஒரு ஊராட்சியாக மாற்றலாம். சங்கராபுரம் ஒன்றியத்தில் ரங்கப்பனூா் ஊராட்சியில் உள்ள மல்லாபுரத்தை தனி ஊராட்சியாக பிரித்து வரையறை செய்யலாம் என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா நன்றி கூறினாா்.
இந்த கூட்டத்தில் திமுக சாா்பில் மாவட்டச் செயலா் அங்கையா்க்கண்ணி, கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் டி.ஏழுமலை உள்ளிட்டோரும் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனா்.