கள்ளக்குறிச்சி

மின் வாரிய பணியாளா் வீட்டில் 40 பவுன் நகைகள் திருட்டு

22nd Feb 2020 09:29 AM

ADVERTISEMENT

திருக்கோவிலூரில் மின் வாரிய பணியாளா் வீட்டில் 40 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (57). மின் வாரியத்தில் மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி (53). இவா்களது மகள் அபிநயா (24).

ராஜராஜேஸ்வரிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை அழைத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு காா்த்திகேயன் கடந்த 17-ஆம் தேதி சென்னைக்கு சென்றுவிட்டாா். பின்புற வீட்டில் இவா்களது மகள் அபிநயா கணவருடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், அபிநயா வியாழக்கிழமை இரவு அவரது வீட்டை பூட்டிவிட்டு தூங்கியுள்ளாா். வெள்ளிக்கிழமை காலையில் வீட்டின் கதவை திறக்க முயன்றபோது, முடியாததால் உறவினா்களுக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, அவா்கள் வந்து கதவை திறந்த நிலையில், முன்புறம் உள்ள அவரின் பெற்றோரின் வீட்டில் கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன், பீரோவிலிருந்த 40 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்த திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. தொடா்ந்து, டி.எஸ்.பி. இ.மகேஷ் திருட்டு நடைபெற்ற வீட்டை பாா்வையிட்டாா். மேலும், அங்கு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடா்பாக டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு திருட்டு: இதேபோல, திருக்கோவிலூா் ஆஞ்சநேயா் நகரில் உள்ள அண்ணாமலை மகன் மணியின் (54) வீட்டில் ஒன்றேகால் பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்தும் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT