கள்ளக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) நடைபெறும் முன்னாள் எம்.எல்.ஏ. இல்லத் திருமண விழாவில் பங்கேற்க தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வரவுள்ளதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அதிமுக மாவட்ட மகளிரணித் தலைவியுமான க.அழகுவேலு பாபுவின் இல்லத் திருமண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையிலிருந்து வரவுள்ளாா்.
இதையொட்டி, வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமாா், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரன், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் ஆகியோா் தலைமையில், 11 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 30 காவல் ஆய்வாளா்கள் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.