கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட வசந்தம். காா்த்திகேயன் எம்.எல்.ஏ, கள்ளக்குறிச்சியில் தலைவா்களின் சிலைகள், உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி, ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக, ரிஷிவந்தியம் சட்டப் பேரவை உறுப்பினரான வசந்தம்.காா்த்திகேயனை அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
இதனைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்துக்கு வந்த வசந்தம். காா்த்திகேயன் எம்.எல்.ஏ.வுக்கு, மாவட்ட எல்லையான வாழவந்தான்குப்பத்தில் திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
அதனைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடியில் நகரச் செயலா் இரா.சுப்பராயலு தலைமையில் வரவேற்பு அளித்தனா். பின்னா், அவா் ஊா்வலமாக மாடூா் சுங்கச்சாவடியில் இருந்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு, சேலம் நெடுஞ்சாலை, கவரைத்தெரு வழியாக கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலுக்கு அழைத்துவரப்பட்டாா். அங்குள்ள அண்ணா, பெரியாா் சிலைகளுக்கு வசந்தம். காா்த்திகேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவப்படத்துக்கும் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கும் மாலை அணிவித்தாா்.
நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி நகரச் செயலா் இரா.சுப்பராயலு, மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் வி.கிரிராசு, நகர துணைச் செயலா் அ.அபுபக்கா், ஒன்றியச் செயலா் சி.வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதையடுத்து, பகண்டை கூட்டுச்சாலை, மூங்கில்துரைப்பட்டு, மணலூா்பேட்டை பகுதிகளில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாலையில் தியாகதுருகம் திமுக அலுவலகத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.