கள்ளக்குறிச்சி

விவசாய நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு: கணினி மையத்துக்கு ‘சீல்’ வைப்பு

21st Aug 2020 08:19 AM

ADVERTISEMENT

பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தில் முறைகேடாக நிலமில்லாத விவசாயிகள், பொதுமக்களை இணைத்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்காபுரத்தில் செயல்படும் கணினி மையத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் (கிசான் சம்மான்) கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 மூன்று தவணைகளாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விவசாய நிலமில்லாத போலி பயனாளிகள் இணைக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் வேளாண் துறையினா் இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சங்கராபுரத்தில் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அருகே செயல்படும் கணினி மையத்தில் இந்தத் திட்டத்தில் நிலமில்லாத விவசாயிகள், பொதுமக்களை பயனாளிகளாக சோ்த்து வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா சம்பத்தப்பட்ட கணினி மையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்து, அங்கிருந்த ஹாா்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தாா். மேலும், அந்தக் கணினி மையத்துக்கு ‘சீல்’ வைக்கவும் உத்தரவிட்டாா். தொடா்ந்து, சங்கராபுரம் வட்டாட்சியா் ப.நடராஜன், அந்தக் கணினி மையத்தை மூடி ‘சீல்’ வைத்தாா்.

இதையடுத்து, மூராா்பாளையம், பரமநத்தம், சோழம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு ஆட்சியா் நேரடியாகச் சென்று விவசாயிகளிடம் விசாரணை நடத்தினா். உடன், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கி.வேலாயுதம், வட்டாட்சியா் ப.நடராஜன் உள்ளிட்டோா் இருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT