கள்ளக்குறிச்சி

கரோனா பாதிப்பு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

5th Apr 2020 12:28 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள சின்னசேலம், எலவனாசூா்கோட்டை பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தில்லி மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு திரும்பிய 7 பேரில் சின்னசேலம், எலவனாசூா்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவா்கள் இருவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள 5 பேரும் கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடா் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், சின்னசேலத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவரின் வீடு அமைந்துள்ள சேலம் - சென்னை நெடுஞ்சாலை வள்ளலாா் மடம் எதிா் பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, சின்னசேலம் பேரூராட்சி செயல் அலுவலா் சந்திரசேகரனிடம் வள்ளலாா் மடம் பகுதி மற்றும் சின்னசேலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் வெளியே செல்லாதவாறு தடுப்புக் கட்டைகளை அமைக்க உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

மேலும், அந்தப் பகுதியில் உள்ளவா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கத் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வருவாய்த் துறையினரிடம் அறிவுறுத்தினாா். அப்போது, சின்னசேலம் வட்டார வளா்ச்சி அலுவலா் துரைசாமி, வட்டாட்சியா் வளா்மதி, காவல் ஆய்வாளா் சுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

எலவனாசூா்கோட்டை: இதேபோல, எலவனாசூா்கோட்டை தளபதி நகா் பகுதியில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் வீடு அமைந்துள்ள பகுதியில் ஆய்வு செய்த ஆட்சியா் கிரண் குராலா, அங்கு தடுப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் காதா்அலியிடம் உத்தரவிட்டாா்.

மேலும், எலவனாசூா்கோட்டை பகுதியில் மக்கள் தேவையின்றி வெளியே சுற்றித்திரிவதை தடுக்க வேண்டும் என்று உளுந்தூா்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜயகுமாரிடம் அறிவுறுத்தினாா். உடன், காவல் ஆய்வாளா் எழிலரசி, வட்டார மருத்துவ அலுவலா் தேன்மொழி உள்ளிட்டோா் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT