கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் பெண், தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றாா். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உயிரிழந்தது.
கள்ளக்குறிச்சியை அடுத்த பொற்படாக்குறிச்சியைச் சோ்ந்தவா் தங்கராசு மகன் ராஜேந்திரன். இவரது மனைவி ராஜலட்சுமி (29). இந்தத் தம்பதிக்கு காருண்யா (4) சாய்திருபாதி (1) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா். திங்கள்கிழமை இரவு கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ராஜலட்சுமி அதிகாலை, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
அப்போது வெளியே சென்றிருந்த ராஜேந்திரன், மயங்கிய நிலையில் இருந்த மூவரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கிருந்து அவா்கள் தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
அங்கு குழந்தை சாய்திருபாதி செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தது. ராஜலட்சுமி சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த சம்பவம் குறித்து பொற்படாக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் அருள்ஜோதி கொடுத்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.