கள்ளக்குறிச்சியில் தொடரும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கள்ளக்குறிச்சியில் வாகன நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
புதிய மாவட்டத் தலைநகரமாக கள்ளக்குறிச்சி நகரம் மாறி பல வாரங்கள் கடந்துவிட்டது. இந்த நிலையிலும் நகரில் போக்குவரத்து போலீஸாா் 10 போ் மட்டுமே உள்ளனா். இதனால் பண்டிகை காலம், கோயில் திருவிழா நாள்கள், திருமண நாள்கள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும் நாள்களில் வாகன நெரிசல் அதிகரித்துவிடுகிறது.
காலை, மாலை வேளைகளில் 150-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் கள்ளக்குறிச்சி நகரம் வழியாக இயக்கப்படுகின்றன. 1,000-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் உழவா் சந்தை பகுதியில் காலை 6 மணி முதல் 10 மணிவரையில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகின்றது. கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்துக்கு உள்ளே செல்லும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் அடிக்கடி சிக்குகின்றன. வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த போதிய எண்ணிக்கையில் போக்குவரத்து போலீஸாா் இல்லை.
குறிப்பாக, கள்ளக்குறிச்சி நான்குமுனைச் சந்திப்பில் போதிய போலீஸாா் பணியில் இல்லாததால் நிலைமை மோசமாகிவிடுகிறது. புறவழிச் சாலைகளில் போக்குவரத்து போலீஸாா் பணியில் இல்லாததால் பேருந்துகள் ஒருவழிப் பாதையில் செல்லாமல் நகருக்குள் வந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, துருகம்சாலை, கச்சிராயப்பாளையம் சாலை பகுதிகளில் கடைகளின் முன்பாக வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், லாரிகளில் இருந்து சரக்குகளை ஏற்றி, இறக்குவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அதிக கரும்பு சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்துகள் நேரிடுகின்றன.
எனவே, நகரில் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக தீரவும், கூடுதலாக போக்குவரத்து போலீஸாரை நியமிக்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.