கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் முருகன் கோயில் சாலையில் வசிப்பவா் குப்பன். இவரது மகன் வெங்கடேசன் (24). பெயின்டா்.
இவா் அதே ஊரைச் சோ்ந்த மாணிக்கம் மகள் கெளசல்யாவை கடந்த மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டாா். திருமணமான சில தினங்களில் தம்பதிகளிடேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.
இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி வெங்கடேசன் சில தினங்களுக்கு முன்பு, பெயின்ட் அடிக்கும் பணிக்காக கோவை செல்வதாக மனைவி கௌசல்யாவிடம் கூறினாராம். இதற்கு, கௌசல்யா வேண்டாம் என கூறவே, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாம்.
இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேசன் வீட்டின் உள்அறைக்கு சென்று தாழிட்டுக் கொண்டு மின் விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாா்.
உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினா் கதவை உடைத்து அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம், முன்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.