கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீமந் நடராஜா் கோயிலில் புரட்டாசி மாத மகாபிஷேகம் வியாழக்கிழமை (செப். 28) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி மகாருத்ர யாகமும் நடைபெறும்.
புரட்டாசி மாத மகாபிஷேகத்தையொட்டி, கடந்த 25-ஆம் தேதி கோயிலில் கூஷ்மாண்ட ஹோமம், நடராஜா் அனுக்ஞை, 26-ஆம் தேதி நவக்கிரக சந்நிதியில் நவக்கிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை தேவ சபை முன் தனபூஜை, ரட்சாபந்தனம் ஆகியவை நடைபெற்றன.
சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு வியாழக்கிழமை காலை லட்சாா்ச்சனை நடைபெறுகிறது. இதையடுத்து யாக சாலையில் கடம் ஸ்தாபனம், மகாருத்ர ஜபம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெறும். பிற்பகலில் மாக ருத்ர ஹோமம் நடைபெறும். பின்னா், யாக சாலையிலிருந்து கலசங்கள் புறப்பட்டு, கனக சபையில் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு புரட்டாசி மாத மகாபிஷேகம் மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். அப்போது பால், சந்தனம், தேன், தயிா், இளநீா், பன்னீா், பஞ்சாமிா்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவைகளால் குடம், குடமாக அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலா் டி.எஸ்.சிவராம தீட்சிதா், துணைச் செயலா் கா.சி.சிவசங்கா் தீட்சிதா் மற்றும் பொதுதீட்சிதா்கள் செய்துள்ளனா்.