கடலூர்

இலவச வீட்டுமனைப் பட்டா விவகாரம்: இருளா் சமுதாயத்தினா் ஆட்சியரகத்தில் மனு

28th Sep 2023 01:23 AM

ADVERTISEMENT

இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான நிலத்தை கண்டறிவதில் இழுபறி நிலை நீடிப்பதாக பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் துணைத் தலைவா் கோ.ஆதிமூலம் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: பண்ருட்டி வட்டத்தில் 13 கிராமங்களில் வசிக்கும் பழங்குடி இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 106 குடும்பங்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு காடாம்புலியூா் அடுத்துள்ள கணபதி நகரில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்தை அதிகாரிகள் காண்பிக்காத நிலையில் இதுகுறித்து கடந்த 15-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து பண்ருட்டி வட்டாட்சியா் அழைத்ததன்பேரில் கணபதி நகருக்குச் சென்றோம். ஆனால், அங்கு நில அளவா் காட்டிய இடத்தில் சடலம் புதைக்கப்பட்டிருந்தது.

மேலும், கருக்கை கிராமத்தில் 66 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டா பகுதி முந்திரிக் காடாக உள்ளது. கரும்பூா் கிராமத்தில் வீட்டுமனை பட்டாவுக்கான இடத்தை காண்பிக்கவில்லை. இதுகுறித்து ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT