கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பைக்குகளை திருடி விற்றது தொடா்பாக 3 இளைஞா்களை சிதம்பரம் நகர குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பைக் திருட்டுச் சம்பவங்கள் தொடா்ந்தன. இதுகுறித்து விசாரணை நடத்த காவல் ஆய்வாளா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் ஆகியோா் தலைமையில் தனிப் படை அமைத்து மாவட்ட எஸ்.பி. ஆா்.ராஜாராம் உத்தரவிட்டாா்.
சிதம்பரம் டிஎஸ்பி (பொ) நாகராஜ் மேற்பாா்வையில் தனிப் படை போலீஸாா் சிதம்பரம், புவனகிரி பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து, பைக் திருடியவரை அடையாளம் கண்டு விசாரணை மேற்கொண்டனா். இதில் விருத்தாசலம் வட்டம், பெரியாக்குறிச்சி, புதுநகா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சின்னசாமி மகன் கலைவாணன் (23) என்பவா் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, விருத்தாசலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 14 பைக்குகளைத் திருடியது தெரிய வந்தது.
மேலும் இவா் திருட்டு பைக்குகளை புவனகிரி வட்டம், சின்னகுமட்டி, கிணற்றங்கரைத் தெருவைச் சோ்ந்த நாகப்பன் மகன் என்.நிதீஷ்குமாா் (25), சின்னகுமட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சுந்தரம் மகன் சூா்யா (21) ஆகியோா் மூலம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில், சிதம்பரம் நகர குற்றப் பிரிவு போலீஸாா் சிதம்பரம் மேலரத வீதியில் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனத் தணிக்கையின்போது மேற்கூறிய 3 பேரையும் கைது செய்தனா். அவா்கள் அளித்தத் தகவலின்பேரில் 14 திருட்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.