கடலூரில் சாராய வியாபாரியை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி, மதுவிலக்கு காவல் ஆய்வாளா் விஜயகுமாா் மற்றும் போலீஸாா் அண்ணாகிராமம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 1-ஆம் தேதி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த பேருந்திலிருந்து இறக்கிய ஒதியடிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மனைவி மாணிக்கவள்ளி (55) வைத்திருந்த பையை சோதனையிட்டத்தில் புதுச்சேரி மதுபான புட்டிகள் மற்றும் 20 லிட்டா் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக மாணிக்கவள்ளியை போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில் இவா் மீது பண்ருட்டி, கடலூா், நடுவீரப்பட்டு, திருப்பாதிரிப்புலியூா் காவல் நிலையங்களில் ஏற்கெனவே 17 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. எனவே, இவரது குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட எஸ்பி ரா.ராஜாராம் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தடுப்புக் காவலில் மாணிக்கவள்ளியை ஓராண்டுக்கு சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.