கடலூா், தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து கடலூா் மாவட்டம் பிரிந்து 30 ஆண்டுகள் ஆகிறது. இதனைக் கடைப்பிடிக்கும் விதமாக ‘கடலூா் 30’ என்றத் தலைப்பில் கடலூா் வெள்ளிக் கடற்கரையில் செப்டம்பா் 29 முதல் அக்டோபா் 9-ஆம் தேதி வரை ‘நெய்தல் புத்தகத் திருவிழா’ 110 அரங்குகளுடன் நடைபெற உள்ளது.
மேலும், கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி அரசின் பல்துறை திட்டங்கள் குறித்த கொள்கை விளக்கப் பொருள்காட்சிகள், பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பிரபல பேச்சாளா்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், ஊக்க உரை, இன்னிசை கச்சேரி ஆகியவை நடைபெற உள்ளன.
எனவே, மேற்கூறிய நாள்களில் கடலூா் வெள்ளிக் கடற்கரையில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவா் என்பதால் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.