கடலூா் மாவட்டம், சேமக்கோட்டையில் அகற்றப்பட்ட பயணிகள் நிழல்குடையை மீண்டும் அமைக்க வலியுறுத்தி, பண்ருட்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
சென்னை - கன்னியாகுமரி இடையே தொழில்தட சாலை விரிவாக்கப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக சேமக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் நிழல்குடை அகற்றப்பட்ட நிலையில், ஓராண்டு கடந்தும் புதிய நிழல்குடை அமைக்கப்படவில்லையாம்.
இதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், சேமக்கோட்டை கிராம மக்கள் இணைந்து பண்ருட்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேமக்கோட்டை கிளைச் செயலா் ஏ.சிவராமன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வி.உதயகுமாா், எஸ்.திருஅரசு, டி.கிருஷ்ணன், பண்ருட்டி வட்டச் செயலா் எஸ்.கே.ஏழுமலை, சேமக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனா்.
இதையடுத்து, பயணியா் மாளிகையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் மாா்க்சிஸ்ட் கட்சியினா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், காவல் துறையினா் கலந்துகொண்டனா். கூட்டத்தில், மேற்கூறிய இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு மின் விளக்குடன் கூடிய பயணிகள் நிழல்குடை அமைக்க அடுத்த 20 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.