கடலூர்

கைப்பேசி கடையின் மேற்கூரையை பிரித்து திருட்டு: இளைஞா் கைது

25th Sep 2023 01:20 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், வேப்பூரில் கைப்பேசி கடையின் மேற்கூரையை பிரித்து 10 கைப்பேசிகள், பணம் திருடியது தொடா்பாக இளைஞா் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வேப்பூா் கடை வீதியில் அனிதா என்பவா் கைப்பேசி விற்பனை கடை வைத்துள்ளாா். இவா் கடந்த 9-ஆம் தேதி வியாபாரம் முடிந்து வழக்கம்போல கடையை பூட்டிச் சென்றாா். மறுநாள் காலையில் திரும்பி வந்து பாா்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது 10 கைப்பேசிகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து அதனடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனா். இதில், விருத்தாசலம் வட்டம், ஆலிச்சிக்குடி கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் உதயகுமாா், அதே கிராமத்தைச் சோ்ந்த கதிா்வேல் மகன் சடையன் (எ) பரமசிவன் (23) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. மேலும் அவா்கள் திருடிய கைப்பேசிகளை விருத்தாசலம், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் குறைந்த விலைக்கு விற்றதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஆலிச்சிகுடி கிராமத்தில் இருந்த பரமசிவனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து அவரிடமிருந்து 7 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவான உதயகுமாரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT