பண்ருட்டி அருகே திருட்டு, வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவலில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், காட்டாண்டிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்மோகன் (47). இவரது வீட்டில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 9 ஆடுகள் திருடுபோயின. இதுதொடா்பாக போ்பெரியான்குப்பத்தைச் சோ்ந்த அசோக்குமாரிடம் கேட்டபோது, அவா் ராஜ்மோகனை திட்டி, அவரது சட்டைப் பையில் இருந்த ரூ.1,020 பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து அசோக்குமாரை (24) கைது செய்தனா். இவா் மீது முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் திருட்டு, கொலை மிரட்டல் உள்ளட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அசோக்குமாரின் குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் ஓராண்டு காலம் குண்டா் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, அசோக்குமாரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவலில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.