சிதம்பரம் நடராஜா் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு வருகிற 28-ஆம் தேதி புரட்டாசி மாத மகாபிஷேகமும், உலக அமைதியை வலியுறுத்தி மகாருத்ர யாகமும் நடைபெறவுள்ளன.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி , மாா்கழி, மாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்றுதொட்டு வழக்கமாகும்.
ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
புரட்டாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன் உள்ள கனகசபையில் வருகிற 28-ஆம் தேதி மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது.
முன்னதாக, அன்றைய தினம் காலையில் உச்சிகால பூஜை வரை நடைபெற்று, ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தியை கனகசபைக்கு எழுந்தருளச் செய்து மந்த்ரக்ஷதை, லட்சாா்ச்சனை நடைபெறும். யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீருத்ர கிரம அா்ச்சனை செய்து, தீபாராதனை நடைபெறும். பிற்பகலில் மகாருத்ர மகா ஹோமம், பின்னா் கலசங்கள் யாத்திரா தானம் செய்யப்பட்டு, மகாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் குழுச் செயலா் சிவராம தீட்சிதா் மற்றும் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.