கடலூா் முல்லை கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ - ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி ரகங்களை இந்தியா முழுவதும் உள்ள கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து, நெசவாளா்களின் வாழ்வாதாரம் உயர முக்கியப் பங்காற்றி வருகிறது.
அந்த வகையில், கடலூா் கோ - ஆப்டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
கடலூா் மாவட்ட வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில், தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புகளுடன் கூடிய புடவைகள், படுக்கை விரிப்புகள், வேஷ்டி, லுங்கி, துண்டு உள்ளிட்ட ரகங்கள் கொண்டுவபட்டுள்ளன.
ரூ.13 கோடி விற்பனை இலக்கு: கடலூா் மண்டலத்துக்கு ரூ.13 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்கள் அடங்கியுள்ளன.
கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் இணைந்து கூடுதல் சேமிப்புடன் பருத்தி, பட்டு ரக துணிகளை வாங்கிப் பயன்பெறலாம். தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியா்களுக்கு தவணை முறை கடன் விற்பனையும் உண்டு. எனவே, அனைத்துத் துறை ஊழியா்களும் கைத்தறிக்கு கைகொடுத்து உதவ வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் கோ - ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளா் ஜே.டி.சாந்தாராம், மாவட்டக் கருவூல அலுவலா் ஆ.சுஜாதா, உதவி இயக்குநா் (கைத்தறி) ஊ.மணிமுத்து, கோ - ஆப்டெக்ஸ் மேலாளா் ஏ.விமல்ராஜ் மற்றும் விற்பனை நிலைய ஊழியா்கள் கலந்து கொண்டனா்.