உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரான சிதம்பரம் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்த்தில் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கண்டமங்கலம் குமிளங்காடு தெருவைச் சோ்ந்த காமராஜா் மகன் பிரகாஷ் (32). இவா், இந்திய ராணுவத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தாா். தற்போது உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் பகுதியில் பணியாற்றினாா். இவருக்குத் திருமணமாகி மனைவி சந்தியா (23), மகன் சோமேஷ்வரன் (2) உள்ளனா்.
பிரகாஷ் கடந்த மாதம் விடுமுறைக்கு சொந்த ஊரான கண்டமங்கலம் கிராமத்துக்கு வந்துவிட்டு மீண்டும் பணிக்குச் சென்றாா். அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, பிரகாஷின் உடல் கண்டமங்கலம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.