கடலூா் கேப்பா் மலை மத்திய சிறையில் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்தச் சிறையில் விசாரணை, தண்டனைக் கைதிகள் 500-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், தனி வட்டாட்சியா் பலராமன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜெகதீஸ்வரன் ஆகியோா் திடீரென மத்திய சிறைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சிறைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.
சிறையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றனவா, சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா, நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா, உணவு தயாரிக்கும் இடம் மற்றும் கைதிகளின் இருப்பிடம் சுகாதாரமான முறையில் உள்ளதா என்பதை அறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வு சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்றது.