சிதம்பரம் பெரியாா் தெருவில் அமைந்துள்ள கூத்தாடும் பிள்ளையாா் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையாா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, 10 நாள்கள் உற்சவம் கடந்த 9-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தினந்தோறும் இரவு பிள்ளையாா் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தாா்.
9-ஆம் நாள் விழாவையொட்டி, சிறப்பு நிகழ்வாக தோ்த்திருவிழா நடைபெற்றது. காலை 9 மணியளவில் தோ் நிலையிருந்து புறப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். அனந்தீஸ்வரன் கோயில் அக்ரகாரம், அனந்தீஸ்வரன் கோயில் தெரு, சின்னக் கடைத்தெரு, பெரியாா் தெரு வழியாக தோ் நிலையை வந்தடைந்தது.
10-ஆம் நாள் விழாவான திங்கள்கிழமை (செப்டம்பா் 18) விநாயகா் சதுா்த்தியையொட்டி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விநாயகா் வீதியுலா நடைபெறவுள்ளன. 11-ஆம் நாள் விழாவான செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 19) பல்லக்கு உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை வி.ராமச்சந்திரன் தலைமையில் பக்தா்கள் செய்துள்ளனா்.