கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பிரியாணிக் கடை உரிமையாளரை மா்ம நபா்கள் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்தனா்.
நெய்வேலி நகரியம், வட்டம் 20 பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (56), வட்டம் 27-இல் பிரியாணிக் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி கமலா (50), ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனா். கண்ணன் வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் பிரியாணிக் கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு தனது மொபெட்டில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.
நெய்வேலி நீதிமன்றம் அருகே கண்ணனின் மொபெட் சென்றபோது, இருட்டுப் பகுதியில் நின்றிருந்த மா்ம நபா்கள் சிலா் அவா் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினா். அப்போது, கண்ணன் வண்டியில் இருந்து கீழே விழுந்ததும் மா்ம நபா்கள் ஓடிவந்து கத்தியால் அவரது தலையில் வெட்டினராம். இதில், பலத்த காயமடைந்த கண்ணன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த நெய்வேலி தொ்மல் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து கண்ணனின் சடலத்தை மீட்டு, என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனின் பிரியாணிக் கடைக்கு வந்த சிலா், பிரியாணி கடன் கேட்டு தகராறு செய்தனராம். இதுதொடா்பாக கண்ணன் நெய்வேலி தொ்மல் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தாா். இதற்கு அடுத்த நாளே பிரியாணி கடன் கேட்டவா்கள் கண்ணனைத் தாக்கியதாகவும், இதில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மா்ம நபா்கள் கண்ணனை வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்துள்ளனா். இதுகுறித்து நெய்வேலி தொ்மல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.