கடலூர்

துல்லியமாக அடையாளம் காணும் கேமராக்கள் அமைக்க ஏற்பாடு: கடலூா் எஸ்.பி. ரா.ராஜாராம்

27th Oct 2023 12:24 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துல்லியமாக அடையாளம் காணும் வகையிலான கண்காணிப்பு கேமராக்களை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக எஸ்.பி. ரா.ராஜாராம் தெரிவித்தாா்.

கடலூா் நகர அரங்கு அருகே இருந்த புறக்காவல் நிலையம் சீரமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா, ஒலிபெருக்கி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். மேலும், கேமரா பதிவு காட்சிகளை பாா்வையிட்டு, ஒலிபெருக்கி மூலம் புதுநகா் காவல் நிலையத்தை தொடா்புகொண்டு தகவல் பரிமாற்றத்தைத் தொடங்கிவைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புறக்காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள், அதில் பதிவாகுபவா்களின் முகம் தெளிவாகத் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஒலிபெருக்கி வசதியும் உள்ளது. மாவட்டம் முழுவதும் 4,800 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவைகள் பெரும்பாலும் முக அடையாளம் காண முடியாதபடி அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தற்போது வணிக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிதாக அமைக்கும் கேமராக்களை துல்லியமாக அடையாளம் காணும் வகையில் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இதன் மூலம், வருங்காலத்தில் குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்றாா். கடலூா் டிஎஸ்பி பிரபு, ஆய்வாளா்கள் குருமூா்த்தி, அமா்நாத் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT