கடலூர்

இசா ஏரியில் ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணி தீவிரம்

27th Oct 2023 12:32 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே இசா ஏரியில் ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி வட்டத்துக்குள்பட்ட கருங்குழி, கொளக்குடி முதல் விருத்தாசலம் வட்டத்துக்குள்பட்ட கோட்டகம் வரையில் சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் இசா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் கருங்குழி, கொளக்குடி, கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 500 ஹெக்டோ் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. என்எல்சி இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்ட பின்னா், பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரே ஏரியின் நீராதாரமாக இருந்து வருகிறது.

சுரங்க நீரில் கலந்து வந்த சேறு நாளடைவில் படா்ந்து ஏரி தூா்ந்துவிட்டது. இவ்வாறு தூா்ந்துபோன கோட்டகம் பகுதியில் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனா். இந்த விவசாயப் பயிா்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, என்எல்சி இந்தியா நிறுவனம் இசா ஏரிக்கு தண்ணீா் விடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஏரியின் மூலம் பாசன வசதி பெற்று வந்த கடைமடை பகுதிகளான கருங்குழி, கொளக்குடியில் சுமாா் 100 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெல் வயல்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. மேலும், சுமாா் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நடவு செய்வதற்காக விடப்பட்ட நாற்றுகள் 50 நாள்களைக் கடந்தும் அப்படியே உள்ளன.

இதுகுறித்து தினமணி நாளிதழில் அண்மையில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் உத்தரவின்பேரில், கோட்டகம் பகுதியில் இசா ஏரி ஆக்கிரமிப்புப் பகுதிகளை அளவிடும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. முன்னதாக, கருங்குழி, கொளக்குடி பகுதிகளில் கருகும் பயிா்களைக் காப்பாற்ற என்எல்சி சுரங்க நீரை ஏரியில் திறந்து விடுவது தொடா்பாக, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தின் துணை பொது மேலாளா் குமாரிடம், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சே.சுரேஷ்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதன் பேரில், கடைமடை பகுதிகளான கருங்குழி, கொளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் அளவுக்கு திறந்துவிடப்படும் சுரங்க நீரின் அளவை அதிகரிப்பதாக அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

வட்டாட்சியா்கள் அந்தோணிராஜ் (விருத்தாசலம்), சே.சுரேஷ்குமாா் (குறிஞ்சிப்பாடி), பொதுப் பணித் துறை (நீா் வளம்) உதவிச் செயற்பொறியாளா்கள் படைகாத்தான், செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலையில், நில அளவா்கள் இசா ஏரியில் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT