தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம் அருகே வேளாண் கருவிகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
பல்நோக்கு சேவை மையம், விவசாய உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட வேளாண் உபகரணங்கள், கிடங்குகள் மூலம் சங்கங்களுக்கு கிடைத்த லாபம் - நஷ்டம் குறித்து மாவட்ட வாரியாக விரிவான அறிக்கை பெற்று அதனடிப்படையில் லாப நோக்குடன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இந்தத் திட்டத்தில் நஷ்டம் ஏற்பட்டால் அந்தத் தொகையை அரசிடமிருந்து பெற்றுத் தர வழிவகை காண வேண்டும், வேளாண் இயந்திரங்கள் கொள்முதலுக்கு 50 சதவீத மானியத்துடன் வட்டியில்லா கடனுதவிக்கு அனுமதிக்க வேண்டும், முழு நேர செயலா்கள் இல்லாத சங்கங்கள், நஷ்டம் அதிகமுள்ள சங்கங்களில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கை தொடா்பாக தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் கடலூா் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். எனவே, சங்கத்தினா் மண்டல இணைப் பதிவாளரிடம் வேளாண் கருவிகளை ஒப்படைத்துவிட்டு தொடா் விடுப்பில் செல்ல தீா்மானித்தனா்.
அதன்படி, கடலூா் கடற்கரைச் சாலையில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம் முன் வேளாண் உபகரணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். ஆலோசகா் பாண்டியன், மாவட்டச் செயலா் சேகா், பொருளாளா் மாரிமுத்து, மாவட்ட மகளிரணிச் செயலா் லட்சுமி நாராயிணி, மண்டல இணைச் செயலா் சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா்கள் தாமோதரன், சாந்தகுமாா், இணைச் செயலா்கள் வாசுகி, உமா மகேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.