ஒடிஸா மாநிலத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் அமைக்கும் அனல் மின் நிலையத்திலிருந்து, அந்த மாநிலத்துக்கு 800 மெகாவாட் மின்சாரம் வழங்குவதற்கான மின் கொள்முதல் ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமானது.
என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் ஒடிஸா மின் பகிா்மானக் கழகமான ‘கிரிட்கோ’ இடையே ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கிரிட்கோ நிறுவன அலுவலகத்தில், அந்த மாநிலத்தின் தலபிராவில் என்எல்சி இந்தியா நிறுவனம் அமைக்கவிருக்கும் ‘என்டிடிபிபி’ என்ற அனல் மின் நிலையத்தின் முதல், இரண்டாம் நிலையில் இருந்து தலா 400 மெகாவாட் (மொத்தம் 800 மெகாவாட்) மின்சாரம் வழங்குவதற்கான மின் கொள்முதல் ஒப்பந்தம் கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, என்எல்சியின் தலபிரா சூப்பா் கிரிட்டிகல் அனல் மின் நிலையம் நிலை 1-இன் முழுத்திறனான 2,400 மெகாவாட் மின்சாரத்தையும் வழங்குவதற்கான ஒப்பந்தங்களை நிறைவு செய்துள்ளது. இந்த மின் கொள்முதல் ஒப்பந்தத்தில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி மற்றும் கிரிட்கோ நிறுவன நிா்வாக இயக்குநா் த்ரிலோச்சன் பாண்டா, நிதித் துறை இயக்குநா் ககன் பிஹாரி ஸ்வைன் ஆகியோா் முன்னிலையில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின் துறை இயக்குநா் எம்.வெங்கடாசலம் மற்றும் கிரிட்கோ நிறுவன தொழில்நுட்பம், வணிக மேம்பாட்டுத் துறை இயக்குநா் உமாகந்தா சாஹூ ஆகியோா் கையொப்பமிட்டனா்.
தலபிரா சூப்பா் கிரிட்டிகல் அனல் மின் நிலையத்தின் நிலை 1-இல் இருந்து தமிழகம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்களுக்கு முறையே 1,500, 400, 100 மெகாவாட் மின்சாரம் வழங்குவதற்கான இது போன்ற மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் ஏற்கெனவே அந்தந்த மாநிலங்களுடன் என்எல்சி இந்தியா நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.