கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கியதாக ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வேப்பூா் வட்டம், மங்களூா் ஒன்றியம், வடபாதி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவா் கற்பகம் (27). இவா் கள்ளச்சாராயம் விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சிறுபாக்கம் காவல் உதவி ஆய்வாளா் ராஜாங்கம், சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமேகலை ஆகியோா் தலைமையிலான போலீஸாா் ஊராட்சி மன்றத் தலைவா் கற்பகத்தின் வீட்டில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 4 லிட்டா் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், அவரை போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
கற்பகத்தின் கணவா் மணிவேல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கள்ளச்சாராய வழக்கில் விருத்தாசலம் மதுவிலக்கு போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், தற்போது அவா் தடுப்புக் காவலில் சிறையில் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.