சிதம்பரம்: வீராணம் ஏரியின் நீா்மட்டம் திங்கள்கிழமை 46 அடியாக உயா்ந்தது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள வீராணம் ஏரிக்கு தஞ்சை மாவட்டம், கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீா் வருகிறது. காட்டுமன்னாா்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 44,856 ஏக்கா் விளைநிலங்கள் வீராணம் ஏரி மூலம் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த ஜூன் 18-ஆம் தேதி கல்லணையிலிருந்து கீழணைக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. இதையடுத்து, கீழணையில் படிப்படியாக தண்ணீா் தேக்கப்பட்டு அந்த அணையிலிருந்து ஜூன் 24-ஆம் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 59 கனஅடி நீா் வருகிறது. மேலும், மழையால் நீா்வரத்து அதிகரித்தது.
ஏரியின் உச்ச நீா்மட்டமான 47.50 அடியில் திங்கள்கிழமை நிலவரப்படி நீா்மட்டம் 46 அடியாக இருந்தது. அதாவது ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் 1,100 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. ஏரியிலிருந்து சென்னை குடிநீா் வாரியத்துக்கு விநாடிக்கு 59 கனஅடி நீா் அனுப்பப்படுகிறது.