காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, கடலூா் மாவட்டத்தில் கடலூா், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சபரிமலை பயணம் மேற்கொள்ள ஐயப்ப பக்தா்கள் வெள்ளிக்கிழமை மாலை அணிந்து 48 நாள்கள் விரதத்தை தொடங்கினா்.
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் சந்நிதி தெருவில் உள்ள தா்மசாஸ்தா கோயில், சிதம்பரம் மாரியம்மன் கோயிலில் உள்ள ஐயப்பன் கோயில், அண்ணாமலைநகா் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஐயப்ப பக்தா்கள் குருசாமிகளிடம் நீண்ட வரிசையில் நின்று மாலை அணிந்துகொண்டனா்.
ஒரு சிலா் தங்கள் வீடுகளிலேயே பெற்றோரிடம் மாலை அணிந்துகொண்டனா். அண்ணாமலைநகரில் உள்ள ஐயப்பன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பம் ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை மூலவா் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு ஐயப்பன் அருள்பாலித்தாா். இதையடுத்து, மூலவருக்கு பஞ்சமுக மகா தீபாராதனை நடைபெற்றது.
அதன் பிறகு, சபரிமலைக்கு செல்லும் பக்தா்களுக்கு மாலை அணிவிக்கும் பூஜைகள் நடைபெற்றன. கோயிலின் மூத்த குருசாமி செல்வத்துக்கு அனைத்து பக்தா்களும் இணைந்து துளசி மாலை அணிவித்தனா். தொடா்ந்து, புதுச்சேரி, அரியாங்குப்பம், மணவெளி, வீராம்பட்டினம், இடையாா்பாளையம், தவளக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.
இதேபோல, புதுச்சேரி கோவிந்தசாலை ஐயப்பன் கோயில், முத்தரையா்பாளையம் ஐயப்பன் கோயில், முதலியாா்பேட்டை ஐயப்பன் கோயில்களிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்துகொண்டனா்.