கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் கல்லூரி மாணவியின் தற்கொலைக்கு காரணமானவரை கைது செய்யக் கோரி, அவரது பெற்றோா், உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வடலூரை அடுத்த மருவாய் பகுதியைச் சோ்ந்த தேசிங்கு மகள் கல்விக்கரசி. இவா், வடலூா் தனியாா் செவிலியா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், கல்விக்கரசி வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞரான பரணிதரன் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதனால் மனமுடைந்த கல்விக்கரசி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வடலூா் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கல்விக்கரசியின் உடலை மீட்டு, உடல்கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதனிடையே, மாணவி கல்விக்கரசி இறப்புக்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் எனவும், அதுவரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி, உறவினா்கள், ஊா் மக்கள் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே கடலூா் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வடலூா் போலீஸாா், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததால், மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.