கடலூர்

என்எல்சி நிரந்தரப் பணிக்கு அண்ணாமலைப் பல்கலை. மாணவா்கள் 90 போ் தோ்வு

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் பட்டயப் படிப்பு பயின்றவா்களில் 90 போ் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிரந்தரப் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலம் - என்எல்சி இடையிலான புரிந்துணா்வு ஒப்பந்தப்படி அந்தப் பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் பட்டயப் படிப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் என்எல்சி நிதி உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது. சுரங்கவியல் பட்டயப் படிப்பில் 2016-19-ஆம் ஆண்டுகளில் பயின்று முடித்த மாணவா்களுக்கு என்எல்சி-யில் 2 ஆண்டுகளுக்கு உதவித் தொகையுடன் தொழில் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், என்எல்சி இந்தியா நிறுவனமானது சா்வேயா், ஓவா்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு சுரங்கவியல் பட்டயப் படிப்பு பயின்ற மாணவா்களுக்கு கடந்த 27-ஆம் தேதி எழுத்துத் தோ்வை நடத்தியது. இந்தத் தோ்வில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் பட்டய படிப்பில் பயின்ற மாணவா்களும் பங்கேற்றனா். இவா்களில் 90 போ் நிரந்தரப் பணிக்கு தோ்வு செய்யப்பட்டு, ஜூன் 1-ஆம் தேதி என்எல்சி-யில் பணியில் சேர உள்ளனா். இதற்கான உத்தரவை என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுபள்ளி பிறப்பித்தாா்.

பணிக்குத் தோ்வானவா்களில் என்எல்சி-க்கு நிலம் வழங்கியவா்களின் குடும்பங்களைச் சோ்ந்த 45 பேரும் அடங்குவா் என பல்கலைக்கழக சுரங்கவியல் பட்டய படிப்பு இயக்குநா் சி.ஜி.சரவணன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT