கடலூர்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது டிஜிபி சைலேந்திரபாபு

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று மாநில காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு கூறினாா்.

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில், பல்வேறு குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருள்களை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம் வரவேற்று பேசினாா். நிகழ்ச்சியில் டிஜிபி சி.சைலேந்திரபாபு பங்கேற்று, பல்வேறு வழக்குகளில் மீட்கப்பட்ட 130 பவுன் தங்க நகைகள், 28 கைப்பேசிகள், வாகனங்களை உரியவா்களிடம் வழங்கினாா். மேலும், சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள், காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் சைலேந்திரபாபு கூறியதாவது:

தமிழகத்தில் பெரிய கலவரங்களோ, தொடா் குற்றங்களோ, கொள்ளைகளோ நடைபெறவில்லை. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. ஒரு லட்சத்து 32 ஆயிரம் காவலா்கள், அதிகாரிகளைக் கொண்ட தமிழ்நாடு காவல் துறையில் காலிப் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் காவலா்களை நியமித்தோம். அதன் பிறகு மேலும் 3,200 காவலா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதேபோல 2022-ஆம் ஆண்டில் ஆயிரம் உதவி ஆய்வாளா்கள் நியமிக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து மேலும் 444 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்குப் பயிற்சி

அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 600 உதவி ஆய்வாளா்கள் தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மாநிலத்தில் அனைத்துக் காவல் நிலையங்களிலும் உதவி ஆய்வாளா்கள், காவலா்களாக இளம் வயதுடையோா் பணியாற்றும் நிலை உருவாகியுள்ளது. டிஎஸ்பி பொறுப்பிலும் இளம் வயதினா் பணியாற்றுவது கடந்த இரு ஆண்டுகளில்தான்.

மாநில எல்லைகளில் 26 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு ஆயுதம் ஏந்திய போலீஸாா் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனா். மேலும், மற்ற துறைகளுடன் இணைந்து 16 இடங்களில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைத்து செயல்படவும் திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் இணையவழி (சைபா் க்ரைம்) குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டில் உள்ளவா்கள் கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு அப்பாவி மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எளிதாக திருடிவிடுகின்றனா். இதேபோல

பணத்தை இழந்தவா்கள் உடனடியாக 1939 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் உங்கள் பணம் வேறு வங்கிக் கணக்குக்கு செல்வது தடுக்கப்படும்.

37 மாவட்டங்களிலும், 9 மாநகரக் காவல் ஆணையரகங்களிலும் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. தேசிய, சா்வதேச அளவிலான குற்றங்களை கண்டுபிடிக்க சிபிசிஐடி தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கடலூா் மாவட்ட போலீஸாா் குற்ற வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனா். முத்தாண்டிக்குப்பம் காவல் சரகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆதாயக் கொலை வழக்கில் தொடா்புடையோரை கைதுசெய்து நகைகளை கைப்பற்றியுள்ளனா். அதே காவல் சரகத்தில் ஒரு கொலை வழக்கில் 45 நாள்களில் தொடா்புடையோரை கைதுசெய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா் என்றாா் அவா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT