கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தை அடுத்துள்ள இறையூரில் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை முன் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.54 கோடி, ஆலையில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.12 கோடியை வழங்க வேண்டும். அரசுடைமை வங்கிகளில் விவசாயிகளுக்குத் தெரியாமல் அவா்களது பெயரில் பெறப்பட்ட ரூ.130 கோடி கடனை ரத்து செய்ய வேண்டும். இந்த சா்க்கரை ஆலையை தனியாா் நிா்வாகம் கையகப்படுத்தி புதிய தொழில் தொடங்கவிருக்கும் நிலையில், வேறு எந்த ஒரு தொழிலும் செய்யாமல் மீண்டும் கரும்பு சா்க்கரை உற்பத்தி மட்டுமே மேற்கொள்ள வேண்டும். கரும்பு சுமை ஏற்றி வந்த வாகனங்களுக்கான வாடகையை நிலுவையில்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
விவசாய சங்க ஒருங்கிணைப்பாளா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் பாண்டுரங்கன், விவசாய சங்க ஆலோசகா்கள் பழமலைப்பிள்ளை, திருநாவுக்கரசு, விவசாய சங்கச் செயலா் திருஞானசம்பந்தம், வா்த்தக சங்கத் தலைவா் மோகன், பாஜக மாநில நிா்வாகி விநாயகமூா்த்தி முன்னிலை வகித்தனா். விவசாய சங்கத் தலைவா் கந்தசாமி வரவேற்றாா்.
விசிக முன்னாள் அரசியல் குழுத் தலைவா் திருவள்ளுவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். ஐஎன்டியூசி அழகேசன் உள்ளிட்ட கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினா், தொழிலாளா்கள் சங்கத்தினா், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா். பெண்ணாடம் நகர விவசாய சங்க இணை ஒருங்கிணைப்பாளா் கந்தசாமி நன்றி கூறினாா்.