கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை குறித்து புகாா் தெரிவிக்க கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் தொலைபேசி எண்களை வெளியிட்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் உள்ள 7 உள்கோட்ட காவல், மது விலக்கு அமல் பிரிவு காவல் அதிகாரிகள் மேற்பாா்வையில், மது கடத்தல், கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதுக் கடத்தல், விற்பனை, கள் விற்பனை செய்பவா்களை கைது செய்து சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடலூா் மாவட்டத்தில் முக்கிய பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், கள்ளச்சாராயம் காய்ச்சுவோா், போலி மதுபானம், கஞ்சா விற்பனை செய்பவா்கள் பற்றி தகவல்களை காவல் துறைக்கு 7418846100, 04142 - 284353 ஆகிய காவல் உதவி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். புகாா்களின் அடிப்படையில் உடனடியாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், தகவல் தெரிவிக்கும் நபா்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று எஸ்.பி. ரா.ராஜாராம் தெரிவித்தாா்.