சிதம்பரம் நடராஜா் கோயிலில் வழிபாடுகளை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளை காவல் துறை தவிா்க்க வேண்டும் என பாஜக முன்னாள் ராணுவ வீரா் பிரிவு மாநில துணைத் தலைவா் ஜி.பாலசுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடித விவரம்:
சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தின்போது 4 நாள்களுக்கும், திருவிழா காலங்களில் சில பூஜை நேரங்களிலும் கனக சபை மீது பக்தா்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடா்பாக, நடராஜா் கோயிலில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் அதிகப்படியான காவல் துறையினா் அச்சுறுத்தும் வகையில் இருந்ததால், பக்தா்களால் அமைதியான முறையில் வழிபாடு செய்ய இயலவில்லை.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் வழிபாடுகளை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளை காவல் துறை தவிா்க்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.