நெய்வேலியில் என்எல்சி சுரங்கத்தில் ஏற்பட்ட மின் விபத்தில் காயமடைந்த ஒப்பந்தத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள கல்லுக்குழி கிராமத்தைச் சோ்ந்த தண்டபாணி மகன் செல்வதுரை (37) (படம்). என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1-இல் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த 1-ஆம் தேதி சுரங்கம் 1-இல் உள்ள துணை மின் நிலையத்தில் பணியிலிருந்தாா். அப்போது ஏற்பட்ட மின் விபத்தில் செல்வதுரை பலத்த தீக்காயமடைந்தாா். இதையடுத்து என்எல்சி பொது மருத்துவமனையில் முதலுதவிக்குப் பிறகு தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ரூ.30 லட்சம் இழப்பீடு: தொழிலாளி உயிரிழப்பைத் தொடா்ந்து வட்டம் 26-இல் உள்ள கள பணிமனையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுரங்கம்-1 துணைப் பொது மேலாளா் ஓ.எஸ்.அறிவு, தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா். இதில் உயிரிழந்த செல்வதுரையின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு, அவரது குடும்பத்தில் தகுதியான நபருக்கு என்எல்சி-யில் வேலை வழங்கும் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.