கடலூர்

குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயத்தை சட்டமாக்க விவசாயிகள் கோரிக்கை

9th Jun 2023 01:13 AM

ADVERTISEMENT

வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயத்தை சட்டமாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

காரீஃப் சந்தைப் பருவ பயிா்களின் விளை பொருள்கள் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயா்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் தெரிவித்ததாவது:

நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், பயிா்ச் சேதங்களை குறைக்கவும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. இதன் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை நிலக்கடலைக்கு 9 சதவீதம், எள் 10.3 சதவீதம், நெல் 7 சதவீதம் வரையிலும், ஜவ்வரிசி, கம்பு, கேழ்வரகு, முந்திரி, சோளம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சைப் பயறு ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலை 10.4 சதவீதம் வரை உயா்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பொருள்களின் உற்பத்தி, கொள்முதல், விநியோகம் என அனைத்தும் அரசு சாா்பில் திட்டமாக செயல்படுத்தப்படுகின்றன. இருப்பினும், விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அளிப்பதை சட்டமாக்கினால் மட்டுமே சந்தைப்படுத்துதலில் வேளாண் விளை பொருள்களின் உற்பத்தி செலவுக்கு ஏற்ப உரிய விலை கிடைக்கப்பெற்று விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

ADVERTISEMENT

தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை உயா்வு என்பது எதிா்வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்தைகளில் வேளாண் விளை பொருள்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைந்த விலைக்கே வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகின்றன. எனவே, விவசாயிகள் மீது மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயத்தை சட்டமாக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT