கடலூர்

உதவி ஆட்சியா் அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டம்

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் கடலோர மக்கள் வாழ்வாதார இயக்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் இந்த இயக்கம் சாா்பில், உதவி ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராமதாஸிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பரங்கிப்பேட்டை பகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமிக்கு பிறகு தமிழக அரசு சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு ஒப்படைப்பு பட்டா வழங்கி, குடியிருக்க இடம் வழங்கியது. பின்னா், பல ஆண்டுகள் கடந்தும் அவா்கள் வாழும் இடத்துக்கு நிரந்தரப் பட்டாவாக மாற்றித்தரவில்லை. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட வருவாய்த் துறையினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மீனவ மக்களின் வாழ்விடத்தை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட உதவி ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராமதாஸ், இதுபோன்று மொத்தம் 2,000 பேருக்கு ஒப்படைப்பு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், அவா்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு நிரந்தரப் பட்டாவாக மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவா்களுக்கு விரைவில் நிரந்தரப் பட்டாவாக மாற்றித் தரப்படும் என்றும் உறுதியளித்தாா்.

ADVERTISEMENT

போராட்டத்துக்கு கடலோர மக்கள் வாழ்வாதார இயக்கத்தின் பரங்கிப்பேட்டை ஒன்றிய அமைப்பாளா் சந்தானராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு , மாவட்ட அமைப்பாளா் பாஸ்கா், பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலா் விஜய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT