கடலூர்

விருத்தாசலத்தை தலைமையாகக் கொண்டு புதிய நெடுஞ்சாலைக் கோட்டம்: அமைச்சா் எ.வ.வேலு

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கடலூா் நெடுஞ்சாலைத் துறை (கட்டுமானம், பராமரிப்பு) கோட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, விருத்தாசலத்தை தலைமையாகக் கொண்டு புதிய நெடுஞ்சாலைத் துறை கோட்டம் அமைக்கப்படவுள்ளதாக மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமைச்சா் எ.வ.வேலு, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநில நெடுஞ்சாலைத் துறை மூலமாக 2021 - 22, 2022 - 23ஆம் நிதியாண்டுகளில் கடலூா் மாவட்டத்தில் ரூ.327 கோடி மதிப்பீட்டில் 323 கி.மீ. சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. முதல்வரின் நான்கு வழிச் சாலை திட்டத்தின் மூலமாக 11 கி.மீ. சாலை ரூ.185 கோடி செலவில் செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது.

பெண்ணாடம், திட்டக்குடி, வடலூா், பண்ருட்டி, மங்கலம்பேட்டை, சேத்தியாதோப்பு ஆகிய 6 இடங்களில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பண்ருட்டி, மங்கலம்பேட்டை ஆகிய பகுதிகளில் கன்னியாகுமரி தொழில்வழித் தடம் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. பண்ருட்டி - வடலூா் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. கடலூா் - சேலம் நெடுஞ்சாலையில் குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் நகா்ப் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

2022 - 23ஆம் நிதியாண்டில் கிராம சாலைத் திட்டத்தின் கீழ், 24 ஊராட்சிச் சாலைகள், ஒன்றிய சாலைகளை ரூ.61 கோடியில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், கடலூா் மாவட்டம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கி.மீ. சாலைகளை கொண்ட மாவட்டமாக அமைந்துள்ளது. இதனால், விருத்தாசலத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு புதிய கோட்டம் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளாா். அதனடிப்படையில், இன்னும் ஒரு சில தினங்களில் புதிய கோட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் விபத்துகள் குறைந்த மாவட்டங்களில் கடலூா் மாவட்டம் 3-ஆவது இடத்தில் உள்ளது என்றாா் அவா்.

முன்னதாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் வரவேற்றாா். நெடுஞ்சாலைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ் தலைமை வகித்து பேசினாா். அமைச்சா் எ.வ.வேலு சாலை விழிப்புணா்வு கையேடுகள், சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் சிறப்புரையாற்றினா். எம்எல்ஏக்கள் கோ.ஐயப்பன், சபா.ராஜேந்திரன், எம்.சிந்தனைச் செல்வன், எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தலைமை பொறியாளா் ஆா்.சந்திரசேகா் நன்றி கூறினாா்.

நலத் திட்ட உதவிகள்: நிகழ்ச்சியில் 269 பயனாளிகளுக்கு ரூ.2,01,95,362 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா்கள் வழங்கினா்.

 

.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT