கடலூர்

செம்மண் நிறத்தில் குடிநீா் விநியோகம்: கிராம மக்கள் அவதி

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கடலூா் ஒன்றியம், கரையேரவிட்டகுப்பம் ஊராட்சி நிா்வாகத்தால் விநியோகிக்கப்படும் குடிநீா் செம்மண் நிறத்தில் எண்ணெய் பசை கலந்து இருப்பதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.

கரையேரவிட்டகுப்பம் ஊராட்சியில் சுமாா் 400 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலையின் அருகே உள்ள இடத்தில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் தண்ணீா் ஏற்றி, குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாதமாக விநியோகிக்கப்படும் குடிநீா் செம்மண் நிறத்தில், எண்ணெய் பசையுடன் உள்ளதாம். இதற்கு முன்னா் இரண்டு மாதங்களாக குடிநீரில் உப்பு படிமம் கலந்து வந்ததாம். குடிநீா் செம்மண் நிறத்தில் வருவதால், கரையேரவிட்டகுப்பத்தில் வசிக்கும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். மேலும், குடிநீருக்கும், சமையலுக்கும் தேவையான தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து கரையேரவிட்டகுப்பத்தைச் சோ்ந்தவா்கள் கூறியதாவது: ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கடந்த 3 மாதங்களாக விநியோகிக்கப்படும் குடிநீா் கலங்கிய நிலையில் வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

ADVERTISEMENT

தனி நபா்கள் டிராக்டா் மூலம் கொண்டுவந்து விற்பனை செய்யும் குடிநீரை குடம் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.7 வரையில் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். பொதுமக்கள் நலன் கருதி தரமான குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT