கடலூர்

ஒடிஸா ரயில் விபத்து குறித்து வெள்ளை அறிக்கை: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

DIN

ஒடிஸா ரயில் விபத்து குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினாா்.

இதுகுறித்து கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒடிஸா ரயில் விபத்துக்கு ரயில்வே துறை, மத்திய அரசின் அலட்சியப்போக்குதான் காரணம் என அந்தத் துறை வல்லுநா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். தென் கிழக்கு ரயில்வே மண்டல பொது மேலாளா், அங்குள்ள பிரச்னை குறித்து ரயில்வே அமைச்சகத்துக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளாா். இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை (சிஏஜி) அளித்த அறிக்கையில் அந்தப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிவித்துள்ளனா். சிஏஜி அறிக்கையின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த விபத்தைத் தவிா்த்திருக்க முடியும். அந்த அறிக்கை ரயில்வே அமைச்சகத்தால் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளை அறிக்கை: இந்த விபத்துக்கு பிரதமா் நரேந்திர மோடிதான் பொறுப்பேற்க வேண்டும். ரயில்வே அமைச்சா் பதவி விலகி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

ரயில்கள் மோதுவதைத் தவிா்க்கும் ‘கவாச்’ திட்டத்துக்காக ரூ.952 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. எனவே, ரயில் விபத்து குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மேல்பாதி விவகாரம்: விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி கோயிலுக்குள் நுழைந்த கல்லூரி மாணவா் தாக்கப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, யாரும் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களில் ஆதிதிராவிட மக்கள் சென்று வழிபாடு செய்ய முடியாத நிலை உள்ளது. மேல்பாதி கிராம மக்களின் உரிமை கோரி, வருகிற 9-ஆம் தேதி சென்னையில் எனது தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

அதேபோன்று, மதுரையைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாதிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு தாக்குதல் நடைபெற்றது. இதில், 3 போ் பலத்த காயமடைந்தனா். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை. இதைக் கண்டித்து, வருகிற 12-ஆம் தேதி மதுரையில் விசிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

ஓரணியில் திரள வேண்டும்: மேக்கேதாட்டு அணை குறித்து காவிரி நதி நீா் ஆணையத்திடம் எடுத்துரைத்துள்ளோம். அதை மீறி ஒரு செங்கலைக்கூட எடுத்து வைக்க முடியாது. புதிய நாடாளுமன்றம் பாஜகவின் ஹிந்து ராஷ்டிர கனவுத் திட்டமாகும். அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்காத சாவா்க்கரின் பிறந்த நாளன்று நாடாளுமன்ற புதிய கட்டடத்தை திறந்துள்ளனா். 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்த மாநிலங்கள் வாரியாக கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் உள்ளவா்களை நன்னடத்தை கருதி விடுதலை செய்ய வேண்டும் என்றாா் தொல்.திருமாவளவன்.

காட்டுமன்னாா்கோவில் தொகுதி எம்எல்ஏ ம.சிந்தனைசெல்வன், தொகுதிச் செயலா்கள் பா.தாமரைச்செல்வன், வ.க.செல்லப்பன், மாவட்டச் செயலா் பால.அறவாழி, கோ.நீதிவளவன், பசுமைவளவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT