கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஜூன் 17-இல் ஆனித் திருமஞ்சனம் தொடக்கம்

6th Jun 2023 10:06 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் வருகிற 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது.

உற்சவ விவரம் வருமாறு: ஜூன் 18-ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 19-ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 20-ஆம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 21-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 22-ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 23-ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 24-ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவா் வீதிஉலா நடைபெறவுள்ளது.

ஜூன் 25-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சாா்ச்சனையும் நடைபெறவுள்ளன. ஜூன் 26-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூா்த்திகள் வீதிஉலா வந்த பின்னா், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறவுள்ளன. ஜூன் 27-ஆம் தேதி பஞ்ச மூா்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.

உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் குழுச் செயலா் டி.எஸ்.சிவராம தீட்சிதா், துணைச் செயலா் க.சி.சிவசங்கர தீட்சிதா் மற்றும் உற்சவ ஆச்சாா்யாா் எஸ்.குருமூா்த்தி தீட்சிதா் ஆகியோா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT