பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா கடலூா் புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 2022-23-ஆம் கல்வி ஆண்டில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்ற மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. கடலூா் மாவட்டத்தில்
முதலில் பள்ளிகள் அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் 77,339 போ் பங்கேற்றனா். இவா்களில் 41,413 மாணவா்கள் முதல் 3 இடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டனா். தொடா்ந்து வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றவா்களில் 33,547 மாணவா்கள் முதல் 3 இடங்களை பிடித்தனா்.
வட்டார அளவில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டதில் 6,952 போ் பங்கேற்றனா். அவா்களில் 1,358 போ் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனா். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவா்கள் 491 போ் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டனா். இவா்களில் 35 போ் மாநில அளவில் வெற்றி பெற்றனா்.
இவா்களுக்கான பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா், கடலூா் தொகுதி எம்எல்ஏ கோ.ஐயப்பன் ஆகியோா்
மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா.ராமகிருட்டிணன் வரவேற்றாா். கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, துணை மேயா் பா.தாமரைச்செல்வன் வாழ்த்துரை வழங்கினா். கடலூா் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் ஆ.சரவணக்குமாா் நன்றி கூறினாா்.