கடலூர்

விபத்து வழக்கில் இழப்பீட்டு பணம் மோசடி: இருவா் கைது

2nd Jun 2023 12:34 AM

ADVERTISEMENT

கடலூா் நீதிமன்றத்தில் விபத்து வழக்கில் இழப்பீட்டுப் பணத்தை மோசடி செய்து வங்கியிலிருந்து பெற்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

கடலூரைச் சோ்ந்தவா் பத்மநாபன் (52). இவரது மனைவி கெளசல்யா. இவா்களது மகள்கள் சரண்யா, லாவண்யா. மகன் விவேக். கடந்த 2003-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் பத்மநாபன் உயிரிழந்தாா். கெளசல்யா மற்றும் அவரது குடும்பத்தினா் விபத்து இழப்பீடு கேட்டு கடலூா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஜெய்சங்கா் மூலம் மனு தாக்கல் செய்தனா். பத்மநாபன் குடும்பத்துக்கு ரூ.6 லட்சத்து 69 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் சரண்யா, லாவண்யா ஆகியோா் குழந்தைகளாக இருந்ததால், அவா்களுக்கான பங்குத் தொகை தலா ரூ. ஒன்றரை லட்சம் பாலூரில் உள்ள கனரா வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டது.

கடந்த 2012-ஆம் ஆண்டு லாவண்யா, சரண்யா ஆகியோருக்கு 18 வயது நிறைவடைந்ததையடுத்து, தங்களுக்கான இழப்பீட்டு பங்குத் தொகையைக் கேட்டு வழக்குரைஞா் ஜெய்சங்கா் மூலம் மனு தாக்கல் செய்தனா்.

அப்போது 826/03 என்ற வழக்குக்குப் பதிலாக, தவறுதலாக 1826/03 என்ற வழக்கில் உள்ள ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 540-ஐ பெற்றுக் கொண்டனா். இதுபற்றி அறிந்த நீதிமன்றத்தில் உதவி சிரஸ்தாரராக பணிபுரிந்து வரும் குணாளன் பத்மநாபன் வழக்குக்காக நீதிமன்றத்தில் இருந்த வைப்பீடு ரசீதை திருடினாராம். பின்னா், நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி வழங்கியது போன்று ஒரு போலியான கடிதத்தை தயாா் செய்தாராம்.

ADVERTISEMENT

கடலூா் வண்ணாரப்பாளையத்தை சோ்ந்த சிவதாஸ் உதவியுடன் அந்தக் கடிதத்தை கனரா வங்கியில் கொடுத்து, கடலூா் வண்டிப்பாளையத்தை சோ்ந்த சத்தியமூா்த்தியின் வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்தைப் பெற்று மோசடி செய்தனராம்.

இதற்கிடையே 826/03 என்ற வழக்கில் மேலும் பணம் இருப்பதை அறிந்த வழக்குரைஞா் ஜெயசங்கா், அந்தப் பணத்தை பெறுவதற்காக மீண்டும் லாவண்யா, சரண்யா ஆகியோா் மூலம் இழப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு தொடா்பாக விசாரித்த போது, ஏற்கெனவே 826/03 வழக்கில் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து கடலூா் முதன்மை சாா்பு நீதிமன்ற நீதிபதி அன்வா் சதாத், கடலூா் மாவட்டக் கண்காணிப்பாளா் ரா.ராஜாராமிடம் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக விசாரணை நடத்தும்படி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா். குற்றப் பிரிவு டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், நீதிபதி வழங்கியதுபோல் குணாளன் போலி கடிதம் தயாா் செய்து சத்தியமூா்த்தி, சிவதாஸ் உதவியுடன் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சத்தியமூா்த்தி, சிவதாஸ் ஆகியோரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள உதவி சிராஸ்தாா் குணாளனை தேடி வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT