கடலூா் மாவட்டத்தில் சாராயம் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 3 போ் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விருத்தாசலத்தை அடுத்த பனையந்தூா் கிராமத்தைச் சோ்ந்த அய்யாசாமி மகன் சுரேஷ், புதுவை மாநிலம், குருவிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் கலைமணி (34), காட்டுன்னாா்கோவிலைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் மகன் விஜி (39) ஆகியோா் சாராயம் கடத்தல், விற்பனை தொடா்பாக, விருத்தாசலம், கடலூா், காட்டுமன்னாா்கோவில் போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.
மேலும், இவா்கள் மூவா் மீதும் காவல் நிலையங்களில் பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா்களின் கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்த கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் மூவரையும் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, சுரேஷ், கலைமணி, விஜி ஆகியோரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடலூா் மாவட்ட போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.