மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு மருத்துவா்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தவாக தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு மருத்துவா்களின் சம ஊதியக் கோரிக்கை நியாயமானது. மத்திய அரசு மருத்துவா் 13 ஆண்டுகளில் ரூ.1,23,000 அடிப்படை ஊதியமாக பெறுகின்ற நிலையில், அதே காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவா் ரூ.86,000 மட்டுமே அடிப்படை ஊதியமாக பெறுகிறாா். அதாவது, மத்திய அரசு மருத்துவா்களுக்கு முறையே 4, 9, 13, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும் காலம் சாா்ந்த ஊதிய உயா்வும், பதவி உயா்வும், தமிழ்நாடு அரசு மருத்துவா்களுக்கு 8, 15, 17, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படுவதுதான் இந்த ஊதிய முரண்பாட்டுக்கு காரணம்.
இதற்கு அரசாணை எண் 354-இல் உள்ள எதிா்கால ஷரத்துகளைப் பயன்படுத்தி தீா்வு காண முடியும். ஆனாலும், இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வராதது ஏமாற்றமளிக்கிறது. மருத்துவத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்வதற்குக் காரணம் அரசு மருத்துவா்கள்தான். அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை.
எனவே, தமிழ்நாடு அரசு மருத்துவா்களுக்கு அவா்களின் பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சாா்ந்த ஊதிய உயா்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவா் விவேகானந்தனின் மனைவிக்கு கல்வித் தகுதிக்கேற்ற அரசுப் பணி வழங்க வேண்டும். தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் மருத்துவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என தி.வேல்முருகன் தெரிவித்தாா்.