கடலூா் நகரில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா் வலியுறுத்தினா்.
கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் அதன் தலைவா் வெங்கடேசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. துணைத் தலைவா் முனுசாமி வரவேற்றாா். நிா்வாகிகள் இளங்கோவன், கண்ணபிரான், ராஜேந்திரன், கண்ணன், தனுசு, நடராஜன், பாலு, ரங்கநாதன், அப்பாதுரை, கோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற பணிகள் குறித்து பொதுச் செயலா் மருதவாணன் விளக்கினாா்.
கூட்டத்தில், கடலூா் நகரில் சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கடலூா் நகரின் நீா் ஆதாரமான கொண்டங்கி ஏரி, மேல் ஏரியை பாதுகாக்க வேண்டும், திருவந்திபுரம் கெடிலம் ஆற்றிலிருந்து வரும் நீா்வழித் தடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கொண்டங்கி ஏரி, கேப்பா் மலையை பாதுகாக்க வலியுறுத்தி வருகிற அக்டோபா் 2-ஆம் தேதி காந்தி பிறந்த நாளில் நடைபயணம் மேற்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது, கடலூா் புதிய பேருந்து நிலையத்தை பெரும்பான்மை மக்களது கருத்துப்படி கடலூா் மாநகரிலேயே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.